Wednesday, April 30, 2008

கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 1

கள்ளத் தோணியில் ஒகனேக்கல் வந்த எடியூரப்பா மே 26ஆம் தேதி கர்நாடக முதல்வராக பதவியேற்றால் தமிழக முதல்வர் கருணாநிதி அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வாரா இல்லை சுப்ரீம் கோர்ட் வாய்தாக்களில் அம்மாவட்ட மக்கள் வாய் தாகம் மறக்கப்படுமா போன்ற ஆராய்ச்சிகளில் இறங்காமல் கர்நாடகத் தேர்தலில் என்ன நடக்கிறது என பார்ப்போம்.

*** *** ***


Photo Courtesy: தினகரன்


பெங்களூர் உள்ளிட்ட தெற்கு கர்நாடக மாவட்டங்களில் முதல்கட்டமாக மே- 10ஆம்
தேதி தேர்தல்
. இன்னும் 9 நாட்கள் கூட இல்லாத நிலையில் எனக்குத் தெரிந்தவரை செய்தித்தாள்கள் தான் தேர்தல் பற்றி அலப்பரை பண்ணுகிறதே தவிர பெரும்பாலான பகுதிகளில் இன்னும் பெரிய போஸ்டரோ, யார் வேட்பாளர் போன்ற நோட்டிஸ்களோ, போடுங்கய்யா ஓட்டு கோஷங்களோ காணப்படவில்லை.

கிராமப்புறங்களிலும், சிறு டவுன்களில் கொஞ்சம் திருவிழா நிலை இருக்கலாம் தெரியவில்லை. தொகுதி சீரமைப்பு (கட் அண்ட் பேஸ்ட்) செய்து புதிய தொகுதிகளின் நிலவரப்படி பெங்களூரில் 28 தொகுதிகள். அதனால் இங்கு ஜெயிக்க அனைத்து கட்சிகளும் போட்டாபோட்டி. இங்கு கணிசமான சீட்டுகளை ஜெயித்தால் ஆட்சியை பிடிப்பது இலகு என கட்சிகளும் வரிந்து கட்டியுள்ளன.

வேட்பாளர்களின் சொத்துகணக்கு (காட்டியுள்ளது மட்டும்) 100 கோடி 200 கோடி என பத்திரிக்கைகளுக்குத் தீனி. 220 கோடி சொத்துவைத்துள்ள வேட்பாளர் இந்த தேர்தலில் ஜெயித்தால் இன்னும் 5 ஆண்டுகளில் அதனை எத்தனை மடங்கு பெருக்குவார் என அலுவலகங்களில் டீக்கடை பெஞ்சு ரேஞ்சுக்கு உரையாடல்கள்.

BJP candidate from BTM Layout G. Prasad Reddy is the richest of the candidates with assets worth over Rs. 300 crore. He is followed by fellow land developer Kupendra Reddy, the Congress candidate from Bommanahalli, who has properties worth over Rs. 180 crore.

*** *** ***

2007ஆம் ஆண்டு பிப்ரவரியில் காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு வந்த போது தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கன்னட நடிகர் "ரிபெல் ஸ்டார்" அம்பரீஷ் (அதாங்க 'ப்ரியா'வில் ஸ்ரீதேவிக்கு ஜோடியாக வருவாரே, சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பர், 'கரையெல்லாம் செண்பகப்பூ' ஹீரோயினி சுமலதாவின் கணவர்) இந்தத் தேர்தலில் ஸ்ரீரங்கப்பட்டிணாவில் போட்டியிடுகிறார். மண்டியாவின் மண்ணின் மகனான அவர் (மண்டியா எம்.பி.யாக இருக்கிறார்) அங்கு ஜெயிப்பதில் கடினமாக இருக்காது.

எஸ்.எம். கிருஷ்ணா போட்டியிடவில்லை. அவரது ஆதரவாளர்களுக்கும் டிக்கெட் கொடுக்கவில்லை என பலபேர் தகராறு செய்ய, சில தொகுதிகளில் ரிபெல் போட்டியாளர்களும் உண்டு. பாஜகவிலும் இந்தமாதிரி கரைச்சல்கள். தனது பேரனுக்கு சிவாஜிநகரில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை என முன்னாள் ரயில்வே மந்திரி ஜாஃபர் ஷெரீப் டெல்லிவரை சென்று அன்னை சோனியாவுடன் மீட்டிங் நடத்தி ராஜினாமாவை திரும்பப் பெற்றுள்ளார். ஏதோ ஒரு மாநிலத்தில் கவர்னர் பதவி என அவருக்கு லாலிபாப் கொடுத்துள்ளார் அன்னை.

இதைத் தவிர மாநில தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் முதல்வர் தரம்சிங், தேவகவுடா கட்சியிலிருந்து வந்த சித்தராமையா (தனது முன்னாள் மைசூர் சாமுண்டீஸ்வரி தொகுதி சீரமைப்பில் மாறிவிட்டது என கண்ணீர் விட்டு அழுது சீன் போட்டுள்ளார் - சென்றமுறை இடைத்தேர்தலில் அங்கு சில நூறு வாக்குகளில் அவரை தண்ணி காட்டினார் தே.கவுடா அண்ட் சன்ஸ்), ஹெச்.கே.பாடீல், கவுடா கட்சியிலிருந்து சமீபத்தில் (சீட் கொடுத்தால் மட்டுமே காங்கிரஸ் பேரியக்கத்திற்கு சேவகம் செய்வேன் என மார்தட்டி) சேர்ந்த எம்.பி.பிரகாஷ் என காங்கிரஸில் 10க்கும் மேற்பட்ட முதல்வர் நாற்காலி ஆசை நாயகர்கள்.

பாஜகவிலே எடியூரப்பாதான் முதல்வர் என அறிவித்துவிட்டே களத்தில் இறங்கியுள்ளனர். ஆனால் அங்கும் உள்குத்துகள், ரிபெல் போட்டியாளர்கள் என ஒரே அதகளம் தான். அனந்தகுமார் ஆட்கள் அதிகம் ஜெயித்துவிட்டால் எடியூரப்பாவிற்குத் தலைவலிதான். குஜராத்தில் நடத்திய வெற்றி தேர்தல் வியூகத்தை இங்கும் நடத்திப்பார்க்க அருண்ஜெட்லியூம் வந்து இறங்கியுள்ளார். தமிழகத்திலிருந்து இல.கணேசனோ இன்ன பிறரோ வந்து தமிழர்கள் பகுதியில் பிரசாரம் செய்வார்களா என தெரியவில்லை.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் தேவகவுடா கட்சியின் முக்கிய தலைவரான பி.ஜி.ஆர் சிந்தியாவை பொறுப்பில் பல இடங்களில் (அதே தலித்-பிராமணர்- சிறுபான்மையினர் கூட்டணி) உ.பி. பார்முலாவில் களம் இறங்கியுள்ளது.

முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி பங்காரப்பா தலைமையில் போட்டியிடுகிறது.

தேவகவுடா அண்ட் சன்ஸ் - குமாரசுவாமி, ரேவண்ணா சந்திலே சிந்து பாடும் விதமாக யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தாங்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிடலாம் என கணக்கு போட்டு இறங்கியுள்ளனர். தேவகவுடா குடும்ப வேட்பாளர்களுக்கு எதிராக பெண்களை நிறுத்தினால் அவர்களை மண்ணைக் கவ்வச் செய்யலாம் என எண்ணி (சரித்திரம் அப்படி) காங்கிரஸ் ஹெக்டேயின் மகளையும் இன்னோரு பெரிய தலையின் மருமகளையும் களம் இறக்கியுள்ளது.


ஆக கலக்கப்போவது யாரு என தெரியாத தற்போதைய நிலைமையில் இன்றைய டெக்கான் ஹெரால்ட்- சிஎனென். ஐபிஎன் கணிப்பு காங்கிரஸுக்கு ஆதரவாகத் தெரிகிறது.


கர்நாடகத் தமிழர்கள் யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் ? காவிரிக் கரையின் மண்ணின் மைந்தனான நான் யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் ?

(தொடரும்)

அலெக்ஸ் பாண்டியன்
30-ஏப்ரல்-2008

No comments: