Tuesday, May 06, 2008

கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 2

கர்நாடகத் தமிழர்களின் ஓட்டு யாருக்கு ? கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்கள் யாருக்கு ஓட்டு போடலாம் ? போடவேண்டும் ?

ஒகனேக்கல் என்றாலும் காவிரி என்றாலும் வீரப்பன் என்றாலும் எதற்கெடுத்தாலும் அடிவாங்குவது தமிழர்களும் தமிழர்கள் நடத்தும் வணிக/இன்னபிற நிறுவனங்களும்தான்.
1991ல் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வெளியான சமயம் நடந்த கலவரங்களில் பலர் பாதிக்கப்பட்டனர். அப்போது பங்காரப்பாவின் ஊக்குவிப்பும் போலீசாரின் உள்-கை ஆட்டமும்தான் காரணம்.

ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்டபோதும் பிரச்னை மாதக்கணக்கில் இழுத்தது என்றாலும் எஸ்.எம்.கிருஷ்ணாவின் சற்றே மேம்பட்ட அணுகுமுறையால் வன்முறை குறைந்த அளவில் காணப்பட்டது. பின் காவிரி இறுதி தீர்ப்பு வந்த (பிப்ரவரி 2007) போது குமாரசாமியும் பரவாயில்லை ரகத்தில் கையாண்டதில் ஓரளவு வன்முறை. தற்போது ஓகனேக்கல் பிரச்னையில் கவர்னர் ஆட்சி. அவருக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணிமாற்றம் செய்யவே நேரம் இருக்கிறது போலும்.

தமிழ்ச்சங்கம் மக்களோ சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என கன்னடா ரக்ஷணா வேதிகே, வாட்டாள் நாகராஜ் போன்றோருடன் பேசுவதிலும் நேரம் செலவழித்துகொண்டு உள்ளது.

தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் 3 நாட்களே உள்ள இந்த நிலையிலும் பெங்களூரில் தேர்தல் சம்பந்தப்பட்ட போஸ்டர்களோ, பேனர்களோ, மைக்செட் சத்தங்களோ அதிகம் இல்லை (இந்த முறை). இன்னும் பல வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளின் எல்லா பகுதிகளுக்கும் வரவில்லை.

முன்பெல்லாம் தேர்தல் வேலை செய்யவென்றே ஒவ்வொரு கட்சியிலும் வேலையில்லா இளைஞர்கள் பட்டாளம் மிகவும் ஆக்டிவாக வேலை செய்வர். தற்போது ஐடி கம்பெனிகள், கால்செண்டர் கம்பெனிகளின் தயவால் பலரும் டாக்ஸி ஓட்டுனர், செக்யூரிடி, உணவு காண்டிராக்ட், கட்டுமான வேலை என பிசியாக இருப்பதால் அரசியல்வாதிகளின் பின்னால் அவ்வளவு கூட்டம் இல்லை.

*** *** *** ***

வெயிலோ பட்டையை கிளப்புகிறது. இதில் கிராம, சிறுநகரப் பகுதிகளில் மட்டுமே பிரச்சாரம் சூடு பிடித்திருப்பதாகத் தகவல். பெங்களூரைப் பொறுத்தவரை மக்களிடம் ஒரு வித 'அபதி' (Apathy) என ஆங்கிலத்தில் சொல்லப்படும் விட்டேற்றித்தனம் அல்லது வெறுப்பு தான் காணப்படுகிறது.

ரியல் எஸ்டேட் முதலைகளும், சுரங்க பிசினஸ் பெருச்சாளிகளும்தான் வேட்பாளர்கள், பலருக்கும் பல நூறு கோடிக்கணக்கில் சொத்து. இதில் யார் எம்.எல்.ஏ ஆனாலும் மக்கள் பிரச்னைகளோ மாநிலத்தின் பிரச்னைகளோ கையாளப் போவதில்லை. தங்கள் கோடிகளைப் பெருக்கவே நேரம் செலவழிப்பர் என்பதனால் யாருக்கும் ஆர்வம் இல்லை என்பது தெரிகிறது.

*** *** *** ***

தமிழில் பேசி ஓட்டுக் கேட்டதால் (அதிமுக வேட்பாளர்) ஆட்டோ உடைப்பு என ஒரு பக்கம் செய்தி வந்தாலும் இன்னோரு பக்கம் தமிழர் நிறைந்த அல்சூர், சிவாஜி நகர் பகுதிகளில் ஓட்டுக் கேட்கும் வேட்பாளர்கள் (காங்கிரஸ், பாஜக, ஜனதாதளம்) தமிழிலும் கோஷம் போடத் தவறுவதில்லை.

தமிழர்களுக்கு மட்டுமல்ல. பெங்களூரில் வசிக்கும் பலருக்கும் சரி,, ஏன் கர்நாடகத்தில் வசிக்கும் பலருக்குமே சில பொது பிரச்னைகள்

1) சென்ற 4 ஆண்டுகளில் ஆட்சி, அரசு என்ற ஒன்று இல்லாமலே மாநிலம் குட்டிச்சவர் ஆனதால் இந்த முறையாவது ஏதாவது ஒரு கட்சி ஆட்சி - நல்ல தலைவர் தலைமையில் அமைந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒரு நிலையான ஆட்சி வேண்டும் என்பதே அவா.

2) பெருகிவரும் நிலம், நீர் மற்றும் விலைவாசி பிரச்னைகள். 10 வருடம் முன்பு சென்னை கண்ட நீர் தட்டுப்பாடு பெங்களூரில் இன்னும் சில வருடங்களில் வந்துவிடும் அளவிற்கு எங்கு பார்த்தாலும் வீடுகள், கட்டிடங்கள். நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவில் ரியல் எஸ்டேட்.

3) பெங்களூரைப் பொறுத்தவரை டிராபிக் பிரச்னை ஒரு பெரிய அளவில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் சரியான முடிவுகளும், வேலைகளும் துவங்காத காரணத்தால் இன்னும் சில ஆண்டுகளில் கட்டுக்கடங்காத நிலைமைக்குச் செல்லும் ஒரு நிலை. மேலும் காவிரி, ஒகனேக்கல்,பெல்காம், இந்தி என எதற்கெடுத்தாலும் தடியைத்தூக்கும் கன்னட ரக்ஷணவேதிகே ஆட்களின் அடாவடியால் வெறுத்துப் போயிருக்கும் மக்கள்.

4) தமிழ்நாடு போல ஒரு கட்டுக்கோப்பான கட்சியை நடத்தும் தலைமை இல்லாதது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மேலிடம் தேர்ந்தேடுக்கும் முதல்வருக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் இன்ன பிற முதல்வர் பதவி ஆசைநாயகர்கள்.

பாஜகவிலும் உட்கட்சிபூசல் உண்டு என்றாலும் எடியூரப்பாதான் முதல்வராக முன்னிறுதப்பட்டாலும் ஆட்சிக்கு வந்தால் நிலையாக இருக்கும் என கியாரண்டி கிடையாது. அதுவும் தோணியில் ஏறி ஓகனேக்கல் சென்றமாதிரி அணுகுமுறைகளை பலரும் வரவேற்கவில்லை.

குமாரசுவாமி நல்ல முதல்வர் என பெயர் எடுத்திருந்தாலும் அவர் வந்தால் நல்லாட்சி நடக்கும் என மக்கள் நம்பினாலும், அவர் தந்தையையையும் அண்ணனையும் நினைத்தால் மக்களுக்கு வெறுப்பே. அவர் குடும்பபாசத்தைவிட்டு தனக்கென ஒரு பாதை வகுத்தால் நிச்சயம் வரவேற்பு பெறுவார். தமிழ்நாடு மாதிரி மாநில கட்சி ஆட்சிக்கு வந்தால்தான் மத்தியில் செல்வாக்குடன் மாநிலத்துக்குண்டான தேவைகளை (மிரட்டிப்) பெறலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் நடக்கப்போவது என்ன ?

மீண்டும் ஒரு தொங்கு சட்டசபை வந்து பேரங்களும், பணப்பறிமாற்றங்களும் நடந்து ஊசலாடும் ஆட்சியும், தலையில்லாத வால்கள் துள்ளி ஆடும் போக்கும் நடந்தால் கர்நாடகம் பீகாராகும் நிலைமை ரொம்ப தூரத்தில் இல்லை.Photos Courtesy: Times of India

*** *** ***
தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளால் எல்லா கட்சிகளும் கொஞ்சம் அடக்கியே வாசிக்கின்றன. என்னைப் பொறுத்தவரை - எங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் யாருக்கு குறைந்த அளவில் சொத்தும், நிறைய நல்ல பெயரும் உள்ளதோ அவருக்கே எனது ஓட்டு. இந்தப் பணமுதலைகளுக்கு ஓட்டு போட்டுவிட்டு அவர்கள் சட்டமன்றத்திலோ இன்ன பிற முக்கிய இடங்களிலோ மக்களுக்குக் குரல் கொடுக்காதவர்களுக்கு எனது ஓட்டு நிச்சயம் இல்லை.

வாக்காளர் அடையாள அட்டை கொடுப்பதில் முதல் சில நாட்களில் சில குளறுபடிகள் இருந்தாலும் தேர்தல் கமிஷன் நிச்சயம் நல்ல பணியை குறைந்த கால அளவில் செய்துள்ளது. தனியார் கம்பெனி வசம் போட்டோ எடுத்து, லாமினேட் செய்து வழங்கும் வேலை கொடுத்திருந்தாலும், எல்லா தொகுதிகளிலும் தினமும் 2 இடங்களில் அமைத்து கடந்த 3 வாரங்களாய் நல்ல பணி. பலரும் வந்து வரிசையில் வெயிலில் நின்று வாங்கிச் சென்றனர். ஓட்டு போட வராவிட்டாலும் முகவரி அத்தாட்சி என்ற அளவில் பலரும் பெற்றுகொண்டனர்.

*** *** ***

யார் வந்தால் நல்லது ? எனது பார்வையில்...

1) முதல்வராக குமாரசுவாமி (மைனஸ் குடும்ப உறவுகள்)
2) கட்சியாக - எம்.எல்.ஏக்களாக - பாஜக - (மைனஸ் மதம் சார்ந்த செயல்கள்பாடுகள்)
3) மந்திரிகளாக காங்கிரஸ் (மைனஸ் சோனியாவின் எடுபிடிகள்)

நடக்குமா இது ? 25ஆம் தேதி மாலை தெரியும் ?


(தொடரும்)

அலெக்ஸ் பாண்டியன்
6-மே-2008

1 comment:

காளிதாசன் said...

அலெக்ஸ் ஐயா, முதல்வராக குமாரசாமியும் மந்திரிகளாக காங்கிரசாரும் அடித்த லூட்டியைத்தான் போன தேர்தலிலேயே பார்த்துவிட்டோமே, மறுபடியும் அதற்கே ஆசைப்பட்டால் எப்படி?