Wednesday, May 14, 2008

கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 3

மியான்மரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் புயலால் பாதிப்பு. சீனாவில் பூகம்பத்தால் 10000 பேர் உயிரிழந்தனர், பலர் பாதிப்பு. ஜெய்பூரில் 60க்கும் மேற்பட்டோர் குண்டு வெடிப்பில் பலி. என்ன நடக்கிறது ? ஆனால் இதெல்லாம் பற்றி எதையுமே கவலைப்படாமல் தானுண்டு தங்கள் வேலையுண்டு யார் ஆண்டால் என்ன எது எக்கேடு கெட்டுப் போனால் என்ன என இருக்கும் பெங்களூர் வாழ் பெருமக்களில் 44% மட்டுமே தேர்தலன்று வாக்களித்துள்ளனர்.


மேற்சொன்ன நிகழ்வுகளுக்கும் பெங்களூர் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ? வேறொன்றுமில்லை ஜென்டில்மேன்.. முந்தைய பதிவில் சொன்ன 'அபதி' எனப்படும் விட்டேற்றித்தனம் தான் காரணம்.

முதற்கட்டத் தேர்தல் நடந்த மே 10ஆம் தேதி காலை 7 மணியிலிருந்தே கூட்டம் கூடி ஓட்டுப்போட்டனர் என எழுத ஆசைதான். என்ன செய்வது. வெயில் பட்டையை கிளப்புமுன் ஒட்டுப் போட்டுவிட்டு வரவேண்டும் என 7.30மணிக்கு போனால் ஒவ்வொரு பூத்திலும் ஈ காக்கா இல்லை. அங்கிருந்த போலீஸாரும் பூத் ஏஜண்டுகளும் வாங்கய்யா வாங்க என வரவேற்காத குறை. முதலில் அறிவிக்கப்பட்டிருந்த பள்ளியிலிருந்து எங்கள் வாக்காளர் பட்டியல் வேறு பள்ளிக்கு (அருகில் தான்) மாற்றப்பட்டிருந்தது. அங்கும் ஒரு சில நபர்களே. போனோமா, கையில் மையை வைத்துக்கொண்டோமா, கையெழுத்தைப் போட்டுவிட்டு பட்டனை அமுக்கினோமா என ஒரு சில நிமிடங்களில் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட முடிந்தது.

பெரும்பாலும் வயதானவர்களும் சில 35- 45 வயது தம்பதியினரையும் தான் பார்க்க முடிந்தது. சில மணிநேரங்கள் கழித்து ஏரியாவில் உள்ள எல்லா பள்ளிகளையும் எட்டிப்பார்த்ததில் எல்லா இடங்களிலும் இதே நிலைமைதான். 18- 28 வயதுக்காரர்கள் பலரும் சனிக்கிழமை விடுமுறையை கழிப்பதில் இருந்தனரே ஒழிய ஓட்டுப்போடவேண்டும் என பெருங்கூட்டமாக வரவில்லை. 10 மணிக்குப் பிறகு நல்ல வெயில். பல பூத்களில் ஆளில்லை. அதுவும் மதியம் 1 மணிக்கு ஈ காக்கா கூட இல்லை. பெங்களூரிலேயே இப்படி என்றால் அனல் மாவட்டங்களான பெல்லாரி, ராய்ச்சூர், குல்பர்கா போன்ற 2ஆம் 3ஆம் கட்ட தேர்தல் நாட்களில் எத்தனை பேர் வெயிலுக்கு பயந்து வெளியில் வந்து ஓட்டு போடுவார்கள் என தெரியவில்லை. மே மாதம் தேர்தலை வைத்தது தவறோ என தோன்றுகிறது.

*** *** *** ***

இதுவரை வந்துள்ள கருத்து கணிப்புகள், ஆளாளுக்கு ஒவ்வொன்று சொல்கிறார்கள் ஒரு குழுமம் காங்கிரஸ் வரும் என்கிறது. இன்னொன்று பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கும் என்கிறது. இன்னொன்று மறுபடியும் தொங்கு சட்டசபை தான் என சொல்கிறது. உங்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளுங்கள் ;-)
25ஆம் தேதி மாலை முடிவுகள் தெரிந்துவிடும்.

தொங்கு சட்டசபை வந்தால் தேவகவுடா கட்சியும், பங்காரப்பா கட்சியும், மாயாவதி கட்சியின் சில எம்.எல்.ஏக்களும் தங்கள் பேரங்களை கடை விரிக்கலாம். மீண்டும் கடந்த 4 ஆண்டுகள் நடந்த கூத்துகள் தொடரும். பாஜக ஆட்சிக்கு வந்தால், ஜெய்பூர் மாதிரி குண்டு வெடிக்காமல் இருக்குமா என பலருக்கும் டவுட்டு. காங்கிரஸ் வந்தால் யார் முதல்வர் என்பதை முடிவு செய்யவே 10 நாட்கள் ஆகலாம்.

*** *** *** *** ***ஆக இதெல்லாம் எது நடக்கிறதோ இல்லையோ ஒன்று மட்டும் நிச்சயம். நீங்கள் பெங்களூருக்கு விமான பயணம் செய்பவரா ? அப்படியென்றால் நிச்சயம் 23ஆம் தேதிக்குப் பிறகு கைவசம் 4- 5 மணிநேரம் வைத்துக்கொண்டு பயணம் செய்யவும். ஆம் அன்று முதல் பழைய HAL விமான நிலையம் மூடப்பட்டு புதிய தனியார் விமானநிலையம் தன் பணியைத் துவக்குகிறது. நகரின் தெற்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து சுமார் 2 அல்லது 3 மணிநேரம் பயணநேரம். இன்னும் சாலைகள் ரெடியாகவில்லை.

*** *** *** ***


Photo courtesy: Rediff.com

16ஆம் தேதி நடக்கும் 2ஆவது சுற்றில் எடியூரப்பாவிற்கு ஆப்பு வைப்போம் என பங்காரப்பா ஷிகாரிபுராவில் களம் இறங்கியுள்ளார். எல்லோர் கண்களும் இங்கே தான். இங்கு காங்கிரசும் ஜனதாதளமும் போட்டியிடவில்லை. அந்த அளவிற்கு ஒற்றுமை !!
பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைத்து எடியூரப்பா தோற்றால் யார் முதல்வர் ? அனந்தகுமார் வருவாரா ?

*** *** *** ***


(தொடரும்)

அலெக்ஸ் பாண்டியன்
14-மே- 2008