Friday, August 22, 2008

நிஜ குசேலர்களும் நிஜ ரஜினியும்

குசேலன், ரஜினி அப்படீன்னு பார்த்தவுடன் கும்மிடாதீங்க. இது கதையல்ல நிஜம். கர்நாடகாவில் பெங்களூர் இருக்கிறது, மைசூர் இருக்கிறது. சோமபுராவும் இருக்கிறது.

பெங்களூருக்கும் மைசூருக்கும் இடையில் அரசின் 4 வழிச்சாலை (அருமையான சாலை) இருக்கிறது. இதைத் தவிர தனியார் மூலம் இரு நகரங்களையும் இணைக்கும் நைஸ் எனப்படும் நந்தி கம்பெனிக்கு பல ஆண்டுகள் முன் சாலை ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. 1995ஆம் ஆண்டு தேவகவுடாவால் ஒப்பந்தம் போடப்பட்டது. (Now it is 2008..!) பெங்களூர் மைசூர் இடையே சாலை மட்டுமில்லாமல் அதையொட்டிய துணை நகரங்களும் அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. வந்தது வினை.


Image Courtesy: http://www.nicelimited.com

பெங்களூர் மைசூர் இடையே உள்ள செழிப்பான பல நிலப் பகுதிகளும் தேவகவுடா மற்றும் குடும்பத்தினரின் பினாமி பேர்களிலோ அரசு அதிகாரிகள், பல்வேறு அரசியல் தலைவர்களின் பினாமி பெயர்களிலோ இருப்பதால் அவர்களின் நிலமெல்லாம் நந்தி கம்பெனிக்கு தாரை வார்க்கப்படும் என்ற பயத்தால் இந்த சாலை அமைக்க சுப்ரீம் கோர்ட் வரை எத்தனை முட்டுக் கட்டைகள் ? எத்தனை வழக்குகள் ? சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் எத்தனையோ முறை கர்நாடக அரசையும், தலைமைச் செயலரையும் திட்டி, கண்டனம் செய்து என்னவெல்லாமோ செய்து பார்த்தும் குமாரசாமியோ அவர் தந்தை தேவகவுடாவோ முட்டுக்கட்டை போடுவதை நிறுத்தவில்லை.

பாஜக அரசு வந்தால் இதற்கு தீர்வு ஏற்படும் என மக்கள் நினைத்தனர். ஆனால் அதற்கும் பல்வேறு குடைச்சல்களை தேவகவுடா குடும்பத்தினர் கொடுத்து வந்தனர். சமீபத்தில் தான் பாஜக அரசு எல்லா வழிகளையும் கொஞ்சம் இலகுவாக்கியது. ஆனாலும் குமாரசாமி 'கர்நாடகத்தில் நந்திகிராம்' நிகழும் என்றெல்லாம் சூளுரைத்திருக்கிறார்.

இந்த சாலை மற்றும் பெங்களூர் நகரத்தின் உள்ளேயே வரும் ஓசூர் சாலை முதல் கனகபுரா சாலை வழியாக தும்கூர் சாலையை அடைய வழிசெய்யும் நைஸ் பைபாஸ் சாலை முடிவடைந்தால் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு போக்குவரத்து விடியல் ஏற்படும். இருந்தாலும் அரசியல் தலைகள் இதற்கு தடை ஏற்படுத்தி வருகின்றனர்.

*** *** *** ***

சரி கதைக்கு - ச்சே..! நிஜத்திற்கு வருவோம்.

சோமபுராவில் லக்ஷ்மம்மாவின் குடிசை தற்போது கான்கிரீட் வீடாகியிருக்கிறது. வீட்டில் மின்விசிறி இருக்கிறது, கேஸ் ஸ்டவ் இருக்கிறது. அவர் கணவர் பைக் வைத்திருக்கிறார். கழிப்பிடமோ காம்பவுண்ட் சுவரோ கூட இல்லாதிருந்த முந்தைய குடிசைவாழ்விலிருந்து இந்த கான்கிரீட் வீட்டு வாழ்வு எப்படி ஏற்பட்டது ? நைஸ் கம்பெனி கட்டிக் கொடுத்ததுதான் இது.

லக்ஷ்மம்மாவுக்கு மட்டுமே நிகழ்ந்ததல்ல இது. இன்னும் 23 குடும்பங்களுக்கும் இதுபோலவே நைஸ் கட்டிக் கொடுத்திருக்கிறது. சுமார் 143 கிராமங்களை இதுபோல நைஸ் தத்தெடுத்துள்ளது. அதில் சோமபுரா மட்டும் தற்போது ஒரு மினி நகரத்தைப்போல காணப்படுகிறது. நைஸ் கம்பெனி சாலை போடுவதற்கு விவசாயிகளிடமிருந்து நிலம் வாங்கியிருந்தாலும் அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக இதுபோல வசதியான கிராமங்களை ஏற்படுத்திவருகிறது. வீடுகளை நைஸ் கட்டிகொடுத்திருந்தாலும் அது விவசாயிகளின் விருப்பப்படியே செய்யப்பட்டிருக்கிறது.

*** **** ****

இப்போது இன்னும் நிஜத்திற்கு வருவோம்.

இப்படிக்கட்டிக் கொடுக்கப்பட்ட புதிய கிராமமான சோமபுராவைத் துவக்கிவைக்க யாரை வரவழைத்தது நைஸ் தெரியுமா ? வேறு யாருமில்லை மக்களே ! நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியைத்தான்..!!

ரஜினியும் சென்னையிலிருந்து வந்து கிராமத்தைத் துவக்கி (!?) வைத்து கிராமமக்களோடு சில மணிநேரங்கள் அளவளாவி அவர்கள் பிரச்னைகளை கேட்டுத் தெரிந்துகொண்டுள்ளார்.

கிராமத்தில் வாழும் கிருஷ்ணப்பா சொல்கிறார் 'எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. முதலில் புது வீடு கிடைத்தது. இப்போ ரஜினிகாந்தும் வந்திருக்கிறார், நாங்கள் நிச்சயம் செழிப்பாக வாழ்வோம்."

முழுக்கட்டுரை மூலம் இங்கே

*** *** ****
இவ்வாறு கிராமத்தில் குசேலர்களாய் வாழும் பலருக்கும் ரஜினி நிஜமாகவே வந்து அவர்கள் வாழ்வு செழித்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் ?

அனைவருக்கும் கிருஷ்ண ஜன்மாஷ்டமி வாழ்த்துக்கள்..!!

**** **** ****

இது நைஸ் கம்பெனிக்கான விளம்பரம் அல்ல.

இந்த நைஸ் சாலை கூடிய விரைவில் முடிக்கப்பட்டால் பெங்களுர் தெற்கு பகுதியில் டிராபிக் கொஞ்சம் சீரடையும். அதனால் எனக்கும் கொஞ்சம் வசதி. அவ்வளவே.

மற்றபடி நைஸ் கம்பெனி உரிமையாளர் அஷோக் கேனி பாஜகவினருக்கு நெருக்கமானவர். அதனால் தான் ரஜினியைக் கூப்பிட்டனர் - அவரும் வந்தார் போன்ற உள்குத்துகள் பற்றி ஐயா தெரியாதைய்யா!

- அலெக்ஸ் பாண்டியன்
22 ஆகஸ்ட் 2008