Friday, January 01, 2010

அந்த மூன்று நாட்கள் - 1 (சென்னை)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு (2010) வாழ்த்துகள்..!

அவ்வப்போது ட்வீட்டிக்கொண்டிருந்தாலும், இந்த ஆண்டிலாவது பதிவு எழுதுவதற்கு நேரம் ஏற்படுத்திக்கொள்ள முடியுமா என பார்க்கவேண்டும்.
அட்லீஸ்ட் பயணங்களையாவது படம் போட்டு பிலிம் காட்டலாம் என ஒரு உத்தேசம்.

சமீபத்தில் (சென்ற வாரம் தான் :-) சென்னைக்கு 3 நாட்கள் செல்லவேண்டியிருந்தது. வருடத்திற்கு சிலமுறை சென்னைக்கு சென்றுவந்துகொண்டிருந்தாலும் சென்னைக்குச் செல்வது என்பது எப்போதுமே ஒரு ஆர்வம் மிகுந்த பயணமாகத்தான் இருக்கும்.

பொதுவாக பெங்களூர்- சென்னை மெயிலில் கணினித்துறையினரின் கூட்டம் அம்மும். எல்லோரும் ஒரு BackPackக்கும் மடிக்கணினிப்பையும், தண்ணீர் போத்தலும், சிலர் பெப்ஸி போத்தலில் ஓல்ட்மாங்க்கையும் ஊற்றிக்கொண்டு வந்து இரவு 1 மணி வரை சளசளவென பேசிக்கொண்டு அடுத்தவர்களின் (குழந்தைகள், தாய்மார்கள், வயதானோர்) தூக்கம் பற்றிய கவலையில்லாமல் கூத்தடிப்பார்கள்.

இந்த முறை வார நாளில் செல்ல நேர்ந்ததால் இந்த மாதிரி கும்பல் இல்லை. பயணச்சீட்டு சோதிப்பாளரும் உடனேயே வந்துவிட (பெரும்பாலும் இவர் 11மணிக்கு மேலேயே வருவார் (வண்டி கிளம்புவது 10.45இரவு)) - மிடில் Berthல் ஏறிப்படுத்தால் நல்ல தூக்கம்.

ஷௌஞ்சாலயம் என தசாவதாரத்தில் கமலால் கிண்டலடிக்கப்பட்ட, அந்நியனில் அம்பியால் சுட்டிக்காட்டப்பட்ட கழிவறையின் அருகிலுள்ள இருக்கை (கடைசி நிமிடத்தில் Tatkalல் பயணச்சீட்டு எடுத்தால் இப்படித்தான் மாட்டும்) என்பதாலும் எப்போது முழிப்பு வந்தாலும் கழிவறையின் மணம் மேலும் தூங்கவிடாமல் படுத்தியது. ரயில்வே துறையினர் புல்லட் ரயில் எல்லாம் விடுவதற்குப் பதில் பேசாமல் தற்போது ஓடும் ரயில்களின் சுத்தம், சுகாதாரத்தை மேம்படுத்தலாம்.

பாவம். 2 குழந்தைகளுடன் கீழ் Berthல் படுத்திருந்த ஒரியா தம்பதியினர் குழந்தையுடன் சேர்ந்து ஒரே பர்த்தில் படுப்பதில் சிரமத்துடன் தூங்கமுடியாமல் தவித்தனர். குழந்தைகளுடன் செல்லும் பெற்றோருக்கு (அதுவும் தாய்மார்களுக்கு) இது எப்போதுமே கடினமான ஒன்று. இதற்கு யாரேனும் புதிய வசதியாக கண்டுபிடிக்கமாட்டார்களா ? 4 வயது வரையினாலான குழந்தைகளை படுக்க வைக்க எதேனும் சிறப்பு அட்டாச்மெண்ட் (சாப்பிடும் tray மடித்து வைப்பது போல)

சென்னை மெயில் 4.45am க்குத்தான் சென்றடையும் என்றாலும் திருவள்ளூர் தாண்டும்போதே முழிப்பு வந்துவிடும். செல்பேசியில் பண்பலை வானொலிகளை தூண்டினால் சில நல்ல பழைய பாடல்களைக் கேட்க முடியும். ஆனால் இந்த முறை 4.15amக்கே பேசின் பிரிட்ஜ் வந்துவிட்டது.

மேற்குவாசல் வழியே வெளியில் வந்தால் கால் டாக்ஸி மீட்டரில் என போர்டு வைத்து கூவுகிறார்கள். ஆனால் ஏறிய வண்டியில் மீட்டரைக் காணோம். அதிகாலை என்பதால் இரவு ரேட்டாம். ஃபிக்சட் ரேட் சொல்லி ஏற்றினார் அங்குள்ள பூத் காப்பாளர். 5 மணிக்கே வீடு சேர்ந்து 1 மணிநேரம் தூக்கம், பின்னர் அலுவலகம் நோக்கி OMRல் பயணம்.

OMR என்றால் Old Madras Roadஆ ? இல்லை இது Old Mahabalipuram Road in Chennai.

பெங்களூர் OMR (Old Madras Road) பற்றி பிறகு.

(தொடரும்)

- அலெக்ஸ் பாண்டியன்
01- ஜனவரி - 2010

2 comments:

Anonymous said...

சுவாரஸ்யமாகத் தொடங்கியிருக்கிறீர்கள். நன்றி & வாழ்த்துகள் :)

நான் சென்னைக்கு எப்போதாவது போகிறவன், ஆனாலும் உங்கள் அனுபவங்களோடு ஒன்ற முடிந்தது, அடுத்த பகுதிக்காகக் காத்திருப்பேன்.

- என். சொக்கன்,
பெங்களூரு.

Alex Pandian said...

நன்றி. சொக்கன்.