Friday, January 08, 2010

அந்த மூன்று நாட்கள் - 2 (சென்னை)

பலமுறை இந்த ராஜீவ்காந்தி சாலை என பெயர் வைக்கப்பட்ட ஓ.எம்.ஆர் (OMR) எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் சென்றிருந்தாலும் ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் சில புதிய அடுக்குமாடி கண்ணாடிக் கட்டிடங்கள் முளைத்திருக்கும்.


தற்போது டைடல் பார்க் அருகில் டாடா நிறுவனத்தினரால் ராமானுஜன் சிடி என SEZ - மற்றும் பெரும் குடியிருப்பு கட்டத்துவங்கியுள்ளனர். இதற்கு முன்னர் இங்கு எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிடி இருந்ததோ ? நகரின் ஒரு நல்ல இடத்தில் சூப்பர் இடம்.

மத்யகைலாஷ் எனப்படும் அடையாறு சிக்னலில் துவங்கும் இந்த சாலை வேளச்சேரிக்கு வளையும் வரை நன்றாக இருக்கிறது. இரண்டு புறமும் மூன்று லேன்கள். அதற்குப் பிறகுதான் ஒரிஜினல் முகம்.

OMR ஏன் இவ்வளவு குப்பை கூளங்களுடன் இருக்கிறது. சாலையின் இரண்டு புற ஓரங்களிலும் கல்/மண் மேடுகள், சாக்கடைகள். 3 லேன்கள் இருந்தாலும் 2 லேன்களில் தான் வண்டிகள். 3ஆவது லேனில் இரண்டு புறமும் ஆக்கிரமிப்புகள், கட்டுமான குப்பைகள், வழியும் சாக்கடை நீர்

சென்னைக்கு ஐடி கம்பெனிகள் பெரிய அளவில் வந்து சில ஆண்டுகள் (5 ? 6 ?) தான் ஆகிறது என்றாலும் எல்லா கம்பெனிகளும் இந்த சாலையை ஒட்டியே அமைவதில் சில சங்கடங்கள் உண்டு. பெங்களூரின் (மோசமான) பாடத்தை சென்னை கற்க சில ஆண்டுகள் ஆகலாம். ஆனாலும் சென்னைவாசிகளுக்கு ஒரு நல்ல விஷயம் எம்.ஆர்.டி.எஸ் (MRTS) எனப்படும் பறக்கும் ரயில். அதுவும் இந்த ஐடி காரிடார் எனப்படும் சாலை வழியாக பயணிப்பது.

மிகவும் குறைவான பயணச்சீட்டுக் கட்டணம் 5ரூபாயில் வேளச்சேரி முதல் மந்தைவெளிவரை பயணிக்க முடிகிறது. மும்பை லோகல் அல்லது பீச் தாம்பரம் ரயில்கள் போல கூட்டம், நெரிசல் இல்லை. சாலையில் செல்லும் நேரத்தில் கால் பங்கு நேரம். சத்தம் தான் கொஞ்சம் லொட லொட ஆனாலும் கஷ்டப்படுத்தாத பயணம்சில கேள்விகளும் உண்டு

 • எப்போது முடியும் வேளச்சேரி-பரங்கிமலை கனெக்ஷன் ?
 • என்று வரும் பீச் -மாம்பலம்-பரங்கிமலை-வேளச்சேரி- மயிலாப்பூர் பீச் சர்குலர் ரயில்வே ?
 • சிறுசேரி வழியாக மறைமலை நகர் (மஹிந்த்ரா சிடி) வரை எக்ஸ்டென்ஷன் நடைபெறுமா?
 • MRTS ஏன் அதிகமான நபர்களால் உபயோகப்படுத்தப்படாமல் உள்ளது ?

  வேளச்சேரி, தரமணி என எல்லா ஸ்டேஷன்களும் மிகவும் அழுக்காகவும் (பான் பராக் எச்சில் துப்பிய மெகா சைஸ் தூண்கள்). எல்லா இடங்களிலும் மழை நீர் கசிந்து சுவர்கள் பாசியோடியபடி, சில சமயங்களில் ஈ, காக்கா கூட இல்லாத அமானுஷ்யமான இருட்டு இடங்கள்.


  அதிகம் ஆளில்லாத Basementல், ஸ்டேஷன் மறைவிடங்களில் கல்லூரி, பள்ளி, பாலிடெக்னிக் ஜோடிகள் (அணைத்தபடி), பெற்றோருக்குத் தெரியுமா ?!
  வேளச்சேரி, தரமணி ஸ்டேஷன்கள் செல்வதற்கே பிரம்மபிரயத்னம்-அவ்வளவு குண்டு குழி சாலைகள் மற்றும் மழைநீர் தேங்கிய குட்டைகள். ஏன் negligence ?

  சில மாதங்கள் (வருடங்கள்?!) முன்பு எஸ்.ரா தனது கட்டுரை/பதிவு ஒன்றில் வெளியூரிலிருந்து சென்னைக்கு வருபவர்கள் காலையில் காலைக்கடன் கழிக்க, குளிக்க இடம் கிடைக்காமல் (லாட்ஜ் எடுத்தால் 100 முதல் 500 என எடுத்து வைக்கவேண்டும்) கஷ்டப்படுவதைப் பற்றி எழுதியிருந்தார்.

  இந்த கூட்டமில்லா பறக்கும் ரயில் ஸ்டேஷன்களில் ரூ2 மற்றும் ரூ.5 (குளிக்க) செலவு செய்து அந்த பிரச்னையைத் தீர்க்கலாம் என வழியுள்ளது. இரண்டு பேராக வந்தால் ஒருவர் பெட்டியை/சாமான்களை அவர் கவனித்துக் கொண்டால் மற்றொருவர் குளித்துவிட்டு வரலாம். ரயில் டிக்கெட் 5 ரூ. எடுத்துக் கொண்டால் ரூ.10க்குள் ரெடியாகிவிடலாம் :-)

  *** *** *** *** *** ***

  இன்னும் அரசு அலுவலகங்கள், ரயில்கள், பஸ்கள் போன்றவற்றில் அறிவிப்புகளை பெயிண்ட் அடிக்கும்போது ஏன் எழுத்துக்களை வெட்டிய முறையில் எழுதுகிறார்கள். பிரிடிஷாரின் டெக்னாலஜியா இது ? முழு எழுத்தும் தெரியும்படி பெயிண்ட் செய்தால் என்ன ? யாரின் கட்டளையின் பேரில் இது இன்னும் தொடருகிறது. எதற்காக ? கணினி மூலம் அச்சடிக்கும், பிளக்ஸ் போர்டுகள், பெயின்டிங் என வந்த பிறகும் இன்னும் ஏன் இந்த அட்டை மூலம் ஸ்பிரே பெயின்டிங் ?  படங்கள் செல்பேசியில் எடுக்கப்பட்டது எனவே கொஞ்சம் மசங்கலாக இருக்கலாம்.

  (தொடரும்)

  - அலெக்ஸ் பாண்டியன்
  08-ஜனவரி–2010

  அந்த மூன்று நாட்கள் - 1 (சென்னை)
 •