Sunday, April 10, 2016

ஸ்ரீ தியாகராஜர்

ஏப்ரல் 9 அன்று பெங்களூர் காயன சமாஜத்தில் அரங்கேறிய டிவி வரதராஜன் குழுவினரின் "ஸ்ரீதியாகராஜர்" பாடல் நாடகம் 28ஆவது முறையாம். வாழ்க ! வளர்க!

இசை: பாம்பே ஜெயஸ்ரீ 
கதை,வசனம்: வீயெஸ்வி (ஆ.விகடன்)
டைட்டில் (+ தியாகய்யர் மகள் திருமண நிகழ்வு)) ஓவியங்கள்: ஹிந்து கேஷவ்
இயக்கம்: வரதராஜன் 
 • பெங்களூர் மல்லேஸ்வரம் ஸ்ரீ ஸ்ரீ யதுகிரி எதிராஜ நாராயண ராமனுஜ ஜீயர் அவர்களின் ஆசியுடன் - டிக்கெட் இல்லை, விலையில்லா அனுமதி
  ஜீயரும் 2+ மணிநேரம் அமர்ந்து, பார்த்து, பின்னர் அனைவருக்கும் (கன்னடத்தில்) ஆசி வழங்கினார் 
 • 6 மணிக்கு முன்னரே வந்து இருக்கைகளில் அமர்ந்துவிடவேண்டும் என்ற அறிவிப்பால் அரங்கம் (சுமார் 500+ இருக்கைகள்) 5.15க்கே நிறைந்தது 
 • 4.45க்கே சென்றுவிட்டதால் நல்ல மின்விசிறி காற்று வரும் இருக்கையில் அமர இடம் கிடைத்தது
 • டிராக் சூட்டிலும், டிஷர்டிலும் மேற்பார்வை செய்துகொண்டிருந்த வரதராஜன், பஜ்ஜி, பொங்கல், போண்டா, காபி சாப்பிடும் மேக்கப் போட்ட லட்சுமணர் (வேடக் கலைஞர்), இந்த வெக்கை க்ளைமேட்டிலும் அமெரிக்கையான graceful புடைவையில் பாம்பே ஜெயஸ்ரீ (பலருக்கும் பொறுமையாக  குழு ஃபோட்டோ எடுக்க அனுமதியும் தந்தார்)
 • நாடகத்தின் டைட்டில் ஸ்லைடுகளுக்கு ஹிந்து கேஷவின் ஓவியங்கள் (கார்டூனில்) அருமை. சற்று நேரத்தில் வீயெஸ்வியும் வந்து சேர, பூஜையுடன் நாடகம் துவங்கியது 


 • சுமார் 2.15 மணிநேர நாடகம். அருமையான திரைக்கதை, சில வலிந்து திணிக்கப்பட்ட நகைச்சுவை வசனங்கள் (இந்த மாதிரி மியூஸிக்கல் நாடகத்தில் தேவையா?)
 • வரதராஜன் அவர்களின் ஆத்மார்த்தமான நடிப்பு நிறைவு. சில இடங்களில் தியாகைய்யர் ஜோக்கடிப்பது போன்ற வசனங்கள் ஒட்டவில்லை
 • தியாகய்யர் தெலுங்கு என்பதற்காக அவரது மனைவி(யும் தியாகய்யரின் மன்னியும்) 'ஏமண்டி - ஏமண்டி' என பேசுவதும் ஒட்டவில்லை
 • நாடகத்தின் சரியான இடங்களில் தியாகய்யரின் சரியான கிருதிகளை புகுத்தியிருப்பது, அதனை இசையாக்கியிருப்பதும் அருமை. 'ஜகம் புகழும் புண்ய கதை தியாகையரின் கதையே' என லவ குசா மெட்டு ஃபில்லர்


 • பெரும்பாலான இடங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் மேடைக் கச்சேரி மாதிரி நடிகர்கள் ரெக்கார்ட் செய்த வசனங்களுக்கு வாயசைப்பது போன்றே இருந்தது (எனக்கு மட்டுமா?) 
 • சரபோஜி மகாராஜா போட்டி அறிவிப்பதைக் கூறும் கட்டியக்காரக் குரலுக்காவது வேறு நல்ல உச்சரிப்பாளரை வைத்து ரெக்கார்டு செய்திருக்கலாம் ("ள"கர, 'ல'கரக் கொலை)


 • தியாகய்யரின் மன்னியாக நடித்தவருக்கும் நல்ல ஸ்கோப், அவரும் நிறைவாக செய்திருந்தார்.
 • மேடை அரங்கை (சிறியதாக இருந்தாலும்) நிறைவாக உபயோகப்படுத்தியிருந்தனர், லைட்டிங், இசை அருமை
 • ராமருடன் சீதையாக வந்தவர் ஏன் குஜராத்தி ஸ்டைல் புடவை கட்டியிருந்தார் என தெரியவில்லை, வடநாட்டிலிருந்த்து வந்தவர்கள் என குறிப்பிடப்படுவதாலோ?
 • வரதராஜன் சுமார் 16 - 17 முறை மேடையில் சாஷ்டாங்க நமஸ்காரம் (மேலும் சில முறை காலில் விழுந்து நமஸ்கரிக்க முனையும் நிகழ்வுகளும் உண்டு) இந்த 60+ (?) வயதிலும், செய்வதற்கு உடல் ஒத்துழைப்பதே பெரிய விஷயம்


 • க்ளைமேக்ஸ் காட்சிகள் நெகிழ்வான தருணங்கள்
 • மொத்தத்தில் ஒரு நல்ல மேடை நாடகம் -- இன்னும் கொஞ்சம் (காமெடி இல்லாமல்) சீரியஸாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ?


குழுவினருக்கு வாழ்த்துகள் !!

பி.கு:1. நாடகம் நிறைந்தபின் ஜீயர் கன்னடத்திலேயே அருளாசி வழங்கி பேசினார். நாடகக் குழுவினருக்கோ, வரதராஜனுக்கோ, வீயெஸ்விக்கோ, பாம்பே ஜெயஸ்ரீக்கோ அவர் சொன்னது எல்லாம் ஓரளவு யூகித்தே புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

2. சால்வையும் சந்தனமாலையும் மட்டுமே வரதராஜனுக்கும் குழுவினருக்கும் என இருக்காது என எண்ணுகிறேன், காயன சமாஜம் தகுந்த சன்மானம் கொடுத்திருப்பர், இத்துணை பேர் சென்னையிலிருந்து வந்து, நடத்திச் செல்வது வெறும் ஆத்மார்த்ததிற்காக மட்டுமே அல்ல

மேடை செட் பிராபர்ட்டீஸ், நடிகர்கள், மேக்கப் கலைஞர்,காஸ்டியூம்ஸ் என ஒவ்வொரு ஊருக்கும் எடுத்துச் சென்று, லைட்டிங். இசை என எல்லாம் சரியாய் வர நாடகம் நடத்துவென்பது மிகப் பெரிய Team Effort. அதனை ஒரு பக்தியுடன் செய்யும் ஒவ்வொரு குழுவினருக்கும் வாழ்த்துகள் !!

- அலெக்ஸ் பாண்டியன்
09 - ஏப்ரல் 2016